உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பியில் உள்ள தன்னாட்சி மாநில மருத்துவக் கல்லூரியில், அறுவை சிகிச்சையின் போது 22 வயது இளம்பெண்ணின் அந்தரங்கப் பகுதிகள் மற்றும் முகம் தெரியும் வகையிலான புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அவை வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி, 22 வயது இளம்பெண் ஒருவர் ‘பார்த்தோலின் சிஸ்ட்’ (Bartholin cyst) சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற போது, அங்கிருந்த சில ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் அந்தப் பெண்ணின் அந்தரங்கப் பகுதிகள் மற்றும் முகம் தெரியும்படி புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

மருத்துவக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய இந்தப் புகைப்படங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளன. மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் பிரதீபா குஷ்வாஹாவுக்கு இந்தத் தகவல் எட்டியதையடுத்து, அவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) புகார் அளித்தார்.

இந்த வழக்கை மிகத் தீவிரமாகக் கருதுவதாகக் கூறிய எஸ்பி சத்யநாராயண் பிரஜாபத், துணை காவல் கண்காணிப்பாளர் ஷிவான்க் சிங் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். டிஜிட்டல் தடயங்களை அழித்தாலும் குற்றவாளிகள் தப்ப முடியாது என அவர் எச்சரித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஹரியோம் குமார் சிங், “இது ஒரு மிகப்பெரிய தவறு” என்று ஒப்புக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.