பாஜக அடக்கி வாசிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடுவதால் பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை அடிப்படையில் பாஜகவில் இருந்து அதிமுக வேறுபடுகிறது. பாஜக அடக்கி வாசித்தால் வரும் தேர்தல் அவர்களுக்கு நல்லதாக அமையும்’ என்றார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அம்மாநில அவைத்தலைவர் அன்பரசன் போட்டியிடவுள்ளதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.