ஜார்க்கண்ட் மாநிலம் கூண்டி மாவட்டத்தில், சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு மரண பீதியைக் கிளப்பும் விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பத்ராடோலி கிராமத்தைச் சேர்ந்த விஸ்ராம் முண்டா (45) என்ற நபர் கடந்த மே 10-ஆம் தேதி திருமணத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், போலீசாருக்கு ஒரு ஆற்றுப் படுகையில் இருந்து கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு நபரின் சடலம் கிடைத்துள்ளது.

உடலமைப்பும் முகமும் விஸ்ராமைப் போலவே இருந்ததால், பதறிப்போன குடும்பத்தினர் அது அவர்தான் என நினைத்து, முறைப்படி வாங்கி வந்து கிராம முறைப்படி அடக்கமும் செய்துவிட்டனர். ​ஆனால், அடக்கம் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து, விஸ்ராம் முண்டா திடீரென தனது மகள் வீட்டிற்கு உயிருடன் நடந்து வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். தான் யாரிடமும் சொல்லாமல் ராம்கர் சென்றுவிட்டதாக அவர் கூறியதைக் கேட்டு, குடும்பத்தினரும் கிராம மக்களும் உறைந்து போயுள்ளனர்.

உயிருடன் வந்தவரைப் பார்த்து ஊரே திருவிழா கோலம் பூண்டாலும், விஸ்ராம் முண்டா என நினைத்து புதைக்கப்பட்ட அந்த அடையாளம் தெரியாத நபர் யார்? என்ற மர்மம் இப்போதைக்கு துலங்கவில்லை. தற்போது போலீசார் அந்த உடலைத் தோண்டி எடுத்து டிஎன்ஏ (DNA) சோதனை மூலம் உண்மையான நபர் யார் எனக் கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.