தமிழகத்தில் வறுமை சூழல், பெற்றோரிடம் சண்டை போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையங்களில் தவித்து வரும் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை ரயில் நிலையங்களில் ஆதரவில்லாமலும், சந்தேகப்படியாகவும் சுற்றுத் திரியும் குழந்தைகளை விசாரித்து அவர்களின் பெற்றோர்களோடு சேர்த்து வைப்பதில் மட்டுமல்லாமல் பெற்றோர்களை இழந்த குழந்தைகளாக இருந்தால் அவர்களை காப்பகத்தில் சேர்த்து வைக்கின்றனர்.

அந்த வகையில் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள 143 ரயில் நிலையங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்து 231 குழந்தைகள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதாவது மதுரை ரயில் நிலையத்தில் 176 குழந்தைகளும், திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களில் 18 குழந்தைகளும், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்தில் 21 குழந்தைகளும், திண்டுக்கல்லில் ஆறு பேரும், தூத்துக்குடியில் ஆறு பேரும், விருதுநகரில் நான்கு பேர் என மொத்தம் 196 ஆண் குழந்தைகள் மற்றும் 35 பெண் குழந்தைகள் ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரை கோட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் போன்ற நான்கு ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான உதவி மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.