கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே செல்வம் என்பவர் ஒரு டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்பு அவரது கடையில் கத்திரிக்கோலால் குத்தியபடி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது காது மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து செல்வத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்பவர் அவரை தேடி வந்தது தெரிய வந்தது. அதாவது இவர் ஒரு பேண்டை திருத்துவதற்காக செல்வத்திடம் வந்துள்ளார். அப்போது அவர் அதனை சரியாக தைய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இது பற்றி நேற்று முன்தினம் செல்வத்திடம் அவர் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சந்திரமணி அவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் சந்திரமணியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.