மகாராஷ்டிர மாநிலம் புனே அருகேயுள்ள மாஞ்சரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மருத்துவ உலகையே உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்ப்பப்பையில் இருந்த சிறிய கட்டியை அகற்றச் சென்ற 35 வயது பெண்ணுக்கு, அவரது அனுமதியின்றி முழு கர்ப்பப்பையையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையில், அவரது கர்ப்பப்பையில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற அவர் கடந்த செப்டம்பர் 13, 2025 அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள மருத்துவர்கள், லேசர் அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கட்டியை மட்டும் அகற்றினால் போதும் என்று அந்தப் பெண்ணிடம் உறுதி அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, செப்டம்பர் 17 அன்று அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீண்டும் அதே மருத்துவமனைக்குச் சென்று அவர் பரிசோதித்தபோதுதான், மருத்துவர்கள் கட்டியை மட்டும் அகற்றாமல், அவரது முழு கர்ப்பப்பையையும் (Uterus) அகற்றிய அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.
கட்டியை அகற்ற மட்டுமே அந்தப் பெண் அனுமதி அளித்திருந்த நிலையில், அவரிடமோ அல்லது அவரது உறவினர்களிடமோ எவ்வித முன்னனுமதியும் பெறாமல் இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர். இது குறித்து அந்தப் பெண் கேள்வி எழுப்பியபோது, மருத்துவமனை நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் டாக்டர் சந்தீப் கராட், டாக்டர் மந்தர் சாஹுஜி, டாக்டர் நிஹால் ஷேக், டாக்டர் ஷேசாத் ஷேக்,சூரஜ் காம்ப்ளே (ஊழியர்) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தனியார் மருத்துவமனைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
