கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெந்தியடக்கா அருகே உள்ள பாருடக்கா பகுதியைச் சேர்ந்தவர் விஷாந்த் டிசோசா (52). அவர் ஒரு தனியார் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று விஷாந்த், சாலையோரம் அமைந்திருந்த ஒரு உணவகத்தில் ஆம்லேட் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் முழுமையாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு காசர்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவசரமாக தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி விஷாந்த் டிசோசா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவர்கள், “அவரது தொண்டையில் ஆம்லேட் மற்றும் வாழைப்பழம் சிக்கியதுதான் மூச்சுத்திணறலுக்கு காரணமாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பெந்தியடக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.