தொகுப்பாளர், நடிகை, யூ டியூபர் என பன்முகத் தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே. ஆரம்ப காலக்கட்டத்தில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய பேர்லே மானே பிறகு நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி, தி லாஸ்ட் சப்பர், டபிள் பேரல், பிரீத்தம் ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 2-வது இடத்தை பிடித்தார்.

இதுதவிர பேர்லே மானே டைரக்டர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய வலிமை படத்தில் கிறிஸ்டீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் வாயிலாக தமிழ் திரையுலகில் அறியப்பட்டார். இந்த நிலையில் பேர்லே மானே வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

கேரளாவில் பிரபல யூடியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி பேர்லே மானே வீட்டில் நடந்த இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.