சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்குப் பின்னால் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட ஆறு போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் போலீசாரின் ‘அன்ஆபிசியல்’ தனிப்படைகள் தொடர்பான கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதை தொடர்ந்து,  டி.ஜி.பி., சங்கர் ஜிவால்  புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன்படி, மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் உயர் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் உருவாக்கப்படும் தனிப்படைகள் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனத் தீவிர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வழக்குகள் தவிர, எந்தவொரு போலீஸ் குழுவும் அதிகாரப் பூர்வ அனுமதியின்றி செயல்படக்கூடாது என்றும், யாரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல வேண்டுமானாலும், அவருக்கு முறையான  35B நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் டிஜிபி வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.