சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா தனது நகை காணவில்லை எனக் கூறி, கோவில் காவலாளி அஜித் குமார் மீது சந்தேகம் உள்ளதாக உயர் காவல் அதிகாரியிடம் வாய்மொழி புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின் பேரில், 5 தனிப்படைக் காவலர்கள் அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த விசாரணை தான் பின்னர் கொடுமையாக மாறி, அஜித் குமார் உயிரிழந்த விவகாரம் பெரும் எதிர்வினையை உருவாக்கியது.

அஜித் குமாரின் மரணத்துக்கு காரணமாக இருந்த 5 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள்மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அஜித் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பலரும், இந்த வழக்கில் பேராசிரியை நிகிதா மற்றும் இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மீது கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவ விடுப்பில் இருந்த பேராசிரியை நிகிதா, திங்கள்கிழமை காலை மீண்டும் தனது பணிக்கு திரும்பியுள்ளார். அவரது மீண்டும் பணியில் சேர்ந்தது குறித்து பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த வழக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தால் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எப்படி நடைபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நிகிதா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியிருந்த நிலையில் அவர் மீண்டும் பணிக்கு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.