ஐபிஎல் 2024 போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி வீரராக எம்.எஸ். தோனி களம் இறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியை போன்று தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் அனைத்திலும் எம்.எஸ். தோனி கடைசி வீரராக களம் இறங்கி வருகிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் எம்.எஸ். தோனி கடைசி போட்டியாளராக களமிறங்குவதற்கான காரணத்தை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் எம்.எஸ் தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டது.

அந்த காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இதனால்தான் தோனி குறைந்த அளவிலான பந்துகளை எதிர்கொள்கிறார். நாங்களும் ரசிகர்களை போன்று தோனி நீண்ட நேரம் களத்தில் நின்று ஆட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனால் தற்போது தோனி களமிறங்கும் நேரம் சரியானதுதான். இந்த சீசனில் அவர் சிஎஸ்கே அணிக்கு முக்கிய தேவையாக இருக்கிறார். அவர் கடைசி நேரத்தில் 2 முதல் 3 ஓவர்களில் விளையாட வேண்டிய இடத்தில் இருக்கிறார். அந்த இடத்தில் தோனியை விட  சிறந்த வீரர் யாரும் கிடையாது. இந்த சீசனில் களமிறங்கும் போது தோனி ஒவ்வொரு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையில் தோனி மைதானத்திற்குள் வரும் போது மைதானத்தின் சூழலே மாறிவிடுகிறது. அவருக்கு கிடைக்கும் அன்புக்கு அவரே உரியவர். மேலும் அவர் செய்த சாதனையை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.