மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் வணி நகரின் பரபரப்பான காந்தி சவுக் பகுதியில், சினிமா பாணியில் நைசாகப் பணத்தை அமுக்கிச் சென்ற விநோத திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

லால்குடா பகுதியைச் சேர்ந்த சங்கர் தோதே என்பவர், அங்குள்ள ஸ்டேட் வங்கியில் இருந்து தனது சொந்தத் தேவைக்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, அதை ஒரு பையில் வைத்துத் தனது பைக்கின் ஹேண்டில்பாரில் மாட்டியுள்ளார்.

அவர் காந்தி சவுக் பகுதிக்கு வந்தபோது, அவரை வங்கியிலிருந்தே பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், திடீரென அவரது சட்டையில் ஏதோ அழுக்கை வீசி எறிந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Saamana (@saamana_online)

தன் மீது அழுக்கு பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த சங்கர், பைக்கை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்று தனது சட்டையைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்.

அவர் கவனக்குறைவாக இருந்த அந்த சில நொடிகளைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு சிறுவன், பைக்கில் தொங்கிய 50 ஆயிரம் ரூபாய் பணப் பையை மின்னல் வேகத்தில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

இந்த அதிர்ச்சி திருட்டுச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பணப் பறிப்பு கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.