கர்நாடகாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி குகைக் கோயிலில் (Badami Cave Temples) எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பச்சை நிற ஆடையும் ஹிஜாபும் அணிந்த ஒரு பெண்ணிடம், மற்றொரு பெண் சுற்றுலாப் பயணி அங்குக் காலணி (செருப்பு) அணிந்திருப்பது குறித்துக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.

​இந்த வீடியோவை பகிர்ந்த சிலர், “இந்து பாரம்பரிய சின்னத்தில் ஏன் ஒரு முஸ்லீம் பெண் வேலை செய்ய வேண்டும்? இதுவே மாற்று மத இடத்தில் நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா?” என்று தொல்லியல் துறை (ASI) மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு எதிராகக் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ​ஆனால், இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

வீடியோவை உற்று நோக்கினால், அங்கு சண்டை போடும் பெண் உட்பட மற்ற இந்து சுற்றுலாப் பயணிகளும், அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரும் கூட காலணி அணிந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. “சுற்றி இருக்கும் எல்லாரும் ஷூ போட்டிருக்கும் போது, அந்தப் பெண் ஹிஜாப் அணிந்திருக்கிறார் என்பதற்காக மட்டுமே அவர் டார்கெட் செய்யப்படுகிறாரா?” என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், பாதாமியில் உள்ள சில குகைகளில் தற்போது வழிபாட்டு சிலைகள் (Deities) எதுவும் இல்லாததால், அங்கு வழிகாட்டிகளே காலணிகளைக் கழற்றச் சொல்வதில்லை என்றும், இது திட்டமிட்ட மத வெறுப்புப் பிரச்சாரம் என்றும் நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டி வருவதால் இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.