இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் இரண்டாவது மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்பாக, கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு சுவாரசியமான கருத்து வெளியாகியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகி அசத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முந்த்ரா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில், இந்தியாவின் 15 வயது இளம் அனல் பறக்கும் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்சியை அவர் மனமாரப் பாராட்டியுள்ளார். வைபவ்வின் பெயரும், அவரது ஆட்டத்திறனும் அயர்லாந்து அணியினரிடையே ஒருவித அச்சத்தையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருப்பதை ஜெய் முந்த்ராவின் இந்த பேட்டி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

முதல் போட்டியின் ஜெய் முந்த்ரா, “வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே. வைபவ் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார், விரைவில் சர்வதேச போட்டிக்கான தொப்பியை  அவர் பெறுவார். அவரிடம் உள்ள அசாத்திய திறமை என்னவென்று உலகிற்கே தெரியும், அதை அவரே நிரூபித்தும் காட்டியுள்ளார். வயதை மறந்துவிடுங்கள், மைதானத்தில் அவர் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரிய வெடி வெடிக்கலாம். ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் தற்போது அவர்தான் ஹாட் டாப்பிக். அயர்லாந்து மக்களும் அவரது ஆட்டத்தைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று வைபவ் குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.

முதல் போட்டியில் வைபவ் களமிறக்கப்படாத நிலையில், அந்தப் போட்டியில் இந்தியா தோற்றதால், தற்போது இந்தத் தொடரைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி உள்ளது. ‘வாழ்வா சாவா’ என்ற இந்த 2-வது போட்டியில் வைபவ் சூர்யவன்சிக்கு வாய்ப்பு கிடைத்தால், அவரை கட்டுப்படுத்துவது அயர்லாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி, 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அயர்லாந்தின் வரலாற்று வெற்றிக்குக் காரணமான ஜெய் முந்த்ராவின் இந்த எதார்த்தமான பேச்சும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.