தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். மேலும் அச்சிடப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில் ஆளுநர் உரையை கேட்கதான் பேரவைக்கு வந்தோம், ஸ்டாலின் பேசுவதை கேட்பதற்கு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை, ஏமாற்றம் அளிக்கிறது என்ற அவர் ஆளுநர் அவையில் இருக்கும்போது முதல்வர் அவ்வாறு பேசியது மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது என கூறினார்.