மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் ஏழுமலை இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஆவின் பால் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட  தடை விதித்தனர். ஐகோர்ட்டின் தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.