மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி வேலைக்கு சென்று விட்டு வருவது வழக்கம். இவர் உள்ளூரிலும் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் கீழவளவு பேருந்து நிறுத்தம் அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய நண்பர் ஒருவரின் காரில் அமர்ந்தவாறு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை அவர் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் நவீன் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 3 பேருக்கும் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், நவீன் குமாருக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் போது ஒரு கும்பலுடன் தகராறு இருந்தது தெரியவந்தது. இவர்களுக்கு இடையே புகையிலை பொருட்களை விற்பது தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நவீன் குமாரை கொலை செய்ய அவர்கள் வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.