தென்னாபிரிக்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் லிம்போபோ மாகாணத்தில் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த மேம்பாலம் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஈரப்பதமாக இருந்துள்ளது. அப்போது பாலத்தின் மேல் வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் கவச வேன் ஒன்று சென்றுள்ளது.

இந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பஸ்சுடன் மோதியுள்ளது. இதில் சுற்றுலா பஸ் நிலை தடுமாறி உருண்டு ஆற்றுக்குள் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் ராட்சத கிரேனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத கிரேனை பயன்படுத்தி ஆற்றுள் விழுந்த பஸ்சை வெளியே எடுத்துள்ளனர். இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகின்றது. மேலும் பஸ் ஆற்றுக்குள் விழுந்த போது நான்கு பேர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனை அடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.