கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 358 பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு பகல் பாராமல் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராணுவத்தினருக்கு பாராட்டுகள் என்பது குவிந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ரயான் என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் எழுதிய ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலானது. அதாவது அந்த கடிதத்தில் அன்புள்ள இந்திய ராணுவத்திற்கு, வயநாடு நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதை கண்டு நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்.

நீங்கள் வெறும் பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு உங்கள் பசியை போக்கிக் கொண்டு பாலம் கட்டுவதை பார்த்தேன். அந்த காட்சி என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. நானும் நிச்சயம் ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சேர்வேன் என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கு தற்போது இந்திய ராணுவம் பதிலளித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் அன்புள்ள ரயான் உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகள் தான் எங்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த இதயபூர்வமான வார்த்தைகள் எங்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நீங்கள் சீருடை அணிந்து எங்களுடன் சேரும் நாளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.