ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஜட்தல் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான மோனு என்ற வாலிபர், கடந்த ஜூன் 8-ஆம் தேதி தனது சம்பளப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பெற்றோர் வீட்டில் இருந்த தன் மனைவி தன்னுவை அழைப்பதற்காகக் கிளம்பியுள்ளார். அப்போது மனைவி தன்னு, கணவனுக்குப் போன் செய்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு நைசாகக் கூறியுள்ளார்.
கணவன் அங்கு வருவதற்கு முன்பாகவே, தன்னுவின் கள்ளக்காதலன் சோனு மற்றும் அவனது நண்பர்களான ஹரியோம், அமன் ஆகியோர் அங்கு மறைந்திருந்துள்ளனர். மோனு அந்த இடத்திற்கு வந்தவுடன், நான்கு பேரும் சேர்ந்து அவரை ஒட்டுமொத்தமாக மடக்கி, மூக்கையும் வாயையும் பொத்தி மயக்கமடையச் செய்துள்ளனர்.
பின்னர், மோனு உயிருடன் இருக்கும்போதே அவரை ஒரு வாய்க்காலில் தூக்கி வீசி எறிந்துள்ளனர். மேலும், இது தற்கொலை அல்லது எதிர்பாராமல் நீரில் மூழ்கி இறந்த விபத்து போலக் காட்ட வேண்டும் என்பதற்காக, மோனுவின் ஸ்கூட்டரையும், மொபைல் போன் இருந்த பேக்கையும் வாய்க்கால் கரையிலேயே நிறுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
மறுநாள் காலையில் வாய்க்காலில் இருந்து மோனுவின் சடலத்தை மீட்ட போலீஸார், உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லாததால், இதனை விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆனால், மோனுவின் மொபைல் போனை வாங்கிப் பார்த்த குடும்பத்தினருக்கு, அதில் இருந்த அனைத்து டேட்டாக்களும் அழிக்கப்பட்டிருந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனே சைபர் நிபுணர்களின் உதவியோடு, அந்த போனில் டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்டுகள் மற்றும் கால் ரெக்கார்டுகளை அவர்கள் மீட்டெடுத்தனர். அதில், மோனு காணாமல் போன அன்று மனைவி தன்னுவுக்குப் பலமுறை போன் செய்ததும், அதே நேரத்தில் தன்னு தனது கள்ளக்காதலன் சோனுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் அம்பலமானது. இந்த டிஜிட்டல் ஆதாரங்களை போலீஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து, தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டதில் மனைவி தன்னுவும், அவனது கூட்டாளி ஹரியோமும் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை தன்னு ஒப்புக்கொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் சோனு மற்றும் அமன் ஆகியோரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
