வடகொரியா தன்னுடைய பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானில் நீண்ட காலமாக அணு ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மூன்று ஏவுகணைகளை சோதித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அதிர வைத்துள்ளது. அந்த ஏவுகணைகள் 350 கிலோமீட்டர் தூரத்திற்கு பறந்து சென்று கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பானுக்கும் இடையேயான கடல் பகுதியில் விழுந்தது. முதற்கட்ட மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த மூன்று ஏவுகணைகளும் தென்கொரியாவை இலக்காகக் கொண்டு சோதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது என தென்கொரிய கூட்டுப்படைகளின் தலைமை கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்றும் பியாங்யாங்கில் இருந்து அதிகாலை 2.50 மணியளவில் குறுகியதூர பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப்படை கூறியுள்ளது. மேலும் வடகொரியா தன்னுடைய ஆயுத சக்தியை நவீனப்படுத்தவும், எதிர்காலத்தில் அமெரிக்காவை விட தனது செல்வாக்கை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், 2017 -க்கு பின் முதன் முறையாக தென்கொரியாவிற்குள் ஐந்து ட்ரோன்களை அனுப்பியது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. அதற்கு பதிலடி தரும் விதமாக  தென்கொரியாகவும் மூன்று ஆளில்லா விமானத்தை பறக்க விட்டதாக தெரிவித்திருந்தது. ஆனால் “வடகொரியாவின் ஆயுதங்களை கண்டு தென்கொரியா பயப்படக்கூடாது எனவும் வடகொரியாவின் எந்த ஒரு ஆத்திரமுட்டலுக்கும் தென்கொரியா உறுதியுடன் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் தென்கொரியா அதிபர் கூறியிருந்தது” குறிப்பிடத்தக்கதாகும்.