கிர்ஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்திரா நகரில் பிரகாஷ் -அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் கர்நாடக மாநிலம் ஓசக்கோட்டாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 26 -ஆம் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர்  கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு கார் அவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அனுராதா சென்ற காரை முந்தி சென்று அவர்கள் வழிமறித்தனர்.

அதன்பின் காரில் இருந்து இறங்கிய ஏழு பேர் அனுராதா, பிரபு மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேரையும் வலுகட்டாயமாக இழுத்து தங்கள் காரில் கடத்தி சென்றனர். இதனையடுத்து சேலம் சென்ற அந்த மர்ம நபர்கள் ரூ.5 கோடி கொடுத்தால் ஊழியர்கள் இரண்டு பேரையும் விட்டுவிடுவதாக அனுராதாவிடம் கூறியுள்ளனர். அதற்கு அனுராதா என்னிடம் அவ்வளவு தொகை இல்லை ஒரு லட்சம் தருகிறேன் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் அனுராதா ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி தன்னிடம் இருந்த ஒரு லட்சத்தை எடுத்து அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். அதன் பின் மூன்று பேரையும் அந்த நபர்கள் சேலம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து சூளகிரி சென்ற அனுராதா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .