காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அதன்பிறகு பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததோடு அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இந்த மோதல் போக்கு நடைபெற்று வந்த நிலையில் பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூரை கொண்டாடும் விதமாக தமிழக பாஜக சார்பில் திருப்பூரில் வெற்றி பேரணி நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற இந்த பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு பிறகு பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டின் பொதுமக்களுக்காக தான் பிரதமர் நரேந்திர மோடி மன்னித்துள்ளார். அமைதியா இல்லை போரா எதை விரும்புகிறது பாகிஸ்தான். மேலும் இது அவர்களுடைய கையில் தான் இருக்கிறது என்று கூறினார்.