உத்தரப் பிரதேச மாநிலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய சமஸ்கிருத கல்வி வாரியத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துப் சாதனை படைத்த மாணவன் ரனீஷ் யாதவ் தற்போது கடுமையான சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ளார். பிரதாப்காரைச் சேர்ந்த இவர், ஸ்ரீ ராம் சமஸ்கிருத மேல்நிலைப் பள்ளியில் பயின்று 89.36 சதவீத மதிப்பெண்களுடன் தேர்வில் முதலிடம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால், இவரது இந்தச் சாதனைக்குப் பின்னால் பெரிய அளவிலான ஆவண மோசடி மற்றும் முறைகேடுகள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பக்கத்து ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆஸ்பூர் தேவ்ரா காவல் நிலையத்தில் இந்த மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், மாநிலத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவனின் உண்மையான பெயர் அஜய் குமார் என்றும், அவரது பழைய ஆவணங்களின்படி பிறந்தநாள் வேறோன்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பின்னர் ஆதார் கார்டு உள்ளிட்ட சில ஆவணங்களில் போலியான முறையில் திருத்தங்களைச் செய்து தனது பெயரை ரனீஷ் யாதவ் என மாற்றியதோடு, பிறந்த தேதியையும் மாற்றி அமைத்து இந்தச் சமஸ்கிருதப் பள்ளியில் அனுமதியைப் பெற்றுத் தேர்வெழுதியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டுள்ள காவல்துறையினர், மோசடி, ஆவணத் திருத்தம் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மாணவன் சமர்ப்பித்த பழைய மற்றும் புதிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.