ரயிலில் குளிர்சாதன (ஏசி) பெட்டிகளில் பயணம் செய்ய ஆயிரக்கணக்கில் செலவழித்து டிக்கெட் வாங்கும் பலரும், பயணத்தின் போது தங்களுக்குத் தரப்படும் போர்வையையும், துண்டையும் வீட்டிற்குத் திருடிச் செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர். “நாங்கள் தான் டிக்கெட்டுக்கு நிறையப் பணம் கொடுத்துவிட்டோமே, இதையெல்லாம் எடுத்துச் செல்வதில் என்ன தவறு?” என்ற மலிவான மனநிலையே இதற்கு முக்கியக் காரணம். ஆனால், பயணிகளின் இந்த அற்பத்தனமான செயலால், ரயிலில் பணிபுரியும் ஏழை அட்டெண்டர்கள் தங்களின் கடின உழைப்பால் ஈட்டிய சம்பளத்தை இழந்து கதறும் அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் @bihariladka என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் நவீன் சிங் என்ற இன்ஃப்ளூயன்ஸர், ரயில் அட்டெண்டர் ஒருவரிடம் நடத்திய நேர்காணல் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் இட்டாவா பகுதியைச் சேர்ந்த அமித் யாதவ் என்ற அந்த அட்டெண்டர், தங்களின் குமுறலை அந்த வீடியோவில் கொட்டியுள்ளார். “பயணிகள் போர்வையையும் துண்டுகளையும் திருடிச் செல்லும்போது, அதற்கான அபராதத் தொகை எங்கள் சம்பளத்தில் இருந்துதான் கழிக்கப்படுகிறது. ஒருமுறை என் சம்பளத்தில் இருந்து ரூ.5,000 பிடிக்கப்பட்டது. என்னுடைய மாத சம்பளமே வெறும் 14,000 முதல் 15,000 ரூபாய் மட்டும்தான். அன்றைய நாள் முழுக்க என்னால் வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை” என்று அவர் கண்ணீருடன் விவரித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Naveen Singh (@bihariladka)

ரயிலில் வழங்கப்படும் பொருட்கள் காணாமல் போனால், ரயில்வே நிர்வாகம் அட்டெண்டர்களிடம் இருந்து வசூலிக்கும் அபராதக் கட்டணங்களின் விவரம் இதோ:

  • ஒரு போர்வையின் விலை (கம்பளி): ரூ. 700

  • ஒரு படுக்கை விரிப்பு (பெட்ஷீட்): ரூ. 250

  • ஒரு முகத் துண்டு (டவல்): ரூ. 60

ஒரு பயணி அமித் யாதவிடம் டவல் கேட்டபோது, அவர் அதை நேரடியாகக் கையில் கொடுத்துள்ளார். “கிட்டில் வைக்காமல் ஏன் கையில் தருகிறீர்கள்?” என்று பயணி கேட்டதற்கு, “பயணிகள் இதை அப்படியே திருடிச் சென்றுவிடுகிறார்கள், இதனால் என் சம்பளத்தில் பணம் கழிக்கப்படுகிறது” என்று அமித் கூறியுள்ளார். ஆனால் சோகம் என்னவென்றால், டெல்லி ரயில் நிலையம் வந்ததும் அந்தப் பயணி அந்த டவலைத் திருடிக்கொண்டு நைஸாக நழுவிவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “ஏசி கோச்சில் பயணம் செய்ய வசதி இருக்கும் உங்களால், ஒரு 60 ரூபாய் துண்டையோ, 250 ரூபாய் பெட்ஷீட்டையோ காசு கொடுத்து வாங்க முடியாதா? உங்களின் இந்த அற்பத்தனமான திருட்டால் ஒரு ஏழை ஊழியரின் குடும்பமே பாதிக்கப்படுகிறது” என்று பலரும் காரசாரமாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ரயில்வே பயணத்தின் போது பொதுமக்களிடம் இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூகப் பொறுப்பு  முற்றிலும் அழிந்துவிட்டதையும் இந்தச் சம்பவம் தோலுரித்துக் காட்டியுள்ளது.