ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டிடும் என ஏற்கனவே திமுக அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் இளங்கோவன் போட்டியிட  வாய்ப்புள்ளது. அதேபோல ஈரோடு கிழக்கில் அதிமுகவின் எடப்பாடி அணி போட்டியிடும் என தமாகா தலைவர் ஜி கே வாசன் தெரிவித்து இருந்தார்.

அதேசமயம்  ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஓபிஎஸ் தரப்பு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் காலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓ.பன்னீர் செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிவதாக அறிவித்தார். மேலும் இது தொடர்பான விளக்கங்களை அளித்திருந்தார். தங்கள் தரப்பு வேட்பாளர்களை ஆலோசித்து விரைவில் அறிவிப்போம் என்ற ஒரு கருத்தையும் ஏற்கனவே ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனை நேரில் சென்று சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். ஓபிஎஸ் தலைமையில் வைத்திலிங்கம், கு.ப கிருஷ்ணன், பிரபாகர், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் சந்தித்த பின்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஜி.கே வாசன் சந்திப்பை பொறுத்தவரை ஆதரவு கோரி இருக்கிறோம். மரியாதை நிமித்தமாக ஒரு சந்திப்பை நடத்தியுள்ளோம் என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜி கே வாசனை சந்தித்து ஆதரவுகோரிய நிலையில் ஓபிஎஸ் தரப்பும்  ஆதரவை கோரி இருக்கிறது.

தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மாலை 4 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கமலாலயத்தில் சந்தித்து பேசுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் இதர கட்சிகளான தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தியையும் சந்தித்து பேசவுள்ளார் ஓபிஎஸ்..