சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது. இதனையடுத்து அந்த செல்போன் என்னை ராமகிருஷ்ணன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியபடி தனது செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபி எண் மற்றும் வங்கி விவரங்களை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதே போல் பத்மா என்பவரிடம் பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நாராயணசிங் மற்றும் மஞ்சுசிங் ஆகிய இருவரும் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.