தேனியை சேர்ந்த ஒரு மருத்துவரின் டெலிகிராம் ஆப்பிற்கு கடந்த ஜூலை மாதம் ஒரு லிங்க் வந்தது. அதில் இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை டாக்டர் தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி டாக்டர் மர்ம நபர்கள் கூறிய அறிவுரையின்படி 18 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் எந்த லாபமும் வரவில்லை. கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூரைச் சேர்ந்த தவ்ஹீத் என்பவருக்கு சொந்தமான அக்கவுண்டுக்கு அந்த பணம் சென்றது தெரியவந்தது. அவருக்கு ராமகிருஷ்ணன் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆன்லைன் போலி முதலீடுகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.