மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலங்கொம்பு வாட்டர்ஹோல் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் கார்த்திக், பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வேல்முருகன் வீட்டிற்கு வந்து மகனின் நிலை குறித்து விசாரித்து, பணத்தை திருப்பித் தரக் கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் “கார்த்திக் வீட்டுக்கு வருவதில்லை, அவனது கடன்கள் பற்றி எனக்கு தெரியாது” என்று விளக்கம் அளித்தும் பிரச்சனை விலகவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், சிறுமுகை காவல் நிலையத்தின் இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் மற்றும் மற்ற காவலர்கள் கார்த்திக் வீட்டிற்கு விசாரணைக்காகச் சென்றனர். அப்போது கார்த்திக் வீட்டில் இல்லாததால், அவரது தந்தை வேல்முருகனை காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.

அவர் வர மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த ரஞ்சித், வேல்முருகனை காலால் உதைத்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது. இத்தகவல் விரைவில் கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனின் கவனத்திற்கு வந்தது. இதனால் காவல் கண்காணிப்பாளர், காவல் நிலையத்தின் ஒழுங்குகளை மீறியதால் இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித்தை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.