சென்னை தாம்பரத்தில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அஸ்வினி (32) சாப்ட்வேர் எஞ்சினீயராக பணி புரிகிறார். அதேபோல் அஸ்வினியின் கணவரும் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) மற்றும் ஹார்த்ரா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இவரது மகன் சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இதனால் அஸ்வினி மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து சரியாக தூக்கம் வரவில்லை என்பதால் மருத்துவரின் பரிந்துரையோடு தூக்க மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி தூங்க செல்வதற்கு முன்பு, தூக்க மாத்திரையை டேபிளில் வைத்து விட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அப்போது அஸ்வினியின் இளைய மகள் தவறுதலாக அந்த மாத்திரையை எடுத்து சாப்பிட்டார்.

இதனை கவனிக்காத அஸ்வினி மகளுடன் தூங்க சென்றுவிட்டார். இதையடுத்து அதிகாலை 4 மணி அளவில் அஸ்வினி எழுந்து பார்க்கும் போது, குழந்தை வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது. இதை பார்த்து அஸ்வினி கதறி அழுதார். மகன் இறந்த சோகத்தில் இருந்த மீளாத அஷ்வினி இப்போது மகளும் இறந்துவிட்டதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி தனது கணவனுக்கு தகவல் தெரிவிக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு. பின்னர் பாத்ரூமுக்கு சென்று பிளேடை வைத்து கையை அறுத்துக் கொண்டார். வழக்கம் போல் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்ய குழந்தையின் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பாத்ரூமுக்கு சென்று அஸ்வினி மயங்கி கிடந்ததை பார்த்தார்.

இதுகுறித்து பாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மயங்கி கிடந்த அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.