ஆந்திராவில் போலீசாரின் வாகனத் தணிக்கையின் போது, ஆவணங்கள் இல்லாததால் பயந்துபோய் பைக்கை ஓட்டிச் சென்று மறைத்து வைத்த ஒரு தந்தையின் ரகசியத்தை, அவரது மழலை மாறாத 6 வயது மகனே போட்டுக்கொடுத்த சம்பவம் இணையத்தில் தற்போது செம வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை  சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு வீடாகச் சென்று வாகனங்களின் ஆவணங்களை போலீசார் சரிபார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சுரேஷ் என்பவருக்குப் பயம் பற்றிக் கொண்டது. அவரிடம் வாகனத்துக்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பதறிப்போன அவர் உடனடியாகத் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று பக்கத்து தெருவில் ரகசியமாக ஒளித்து வைத்துவிட்டு வந்துள்ளார்.

 

இதைத் தற்செயலாகக் கவனித்துக் கொண்டிருந்த சுரேஷின் 6 வயது மகன் மகேந்திரா, தன் தந்தை செய்த தந்திரம் எதையும் அறியாமல் நேராக அங்கு பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போலீசாரிடம் சென்றான். மழலை மாறாத குரலில் அவன், “போலீஸ் மாமா… உங்களைப் பார்த்ததும் எங்க அப்பா பயந்துபோய் பைக்கைப் பக்கத்து தெருவுல ஒளிச்சு வச்சுட்டாரு. வாங்க உங்களுக்குக் காட்டுறேன்” என்று கூறிவிட்டு, அப்பாவியாய் போலீசாரைத் தன் கையோடு அழைத்துச் சென்றுள்ளான்.

சிறுவன் கை காட்டிய இடத்திற்குச் சென்று பார்த்த போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பைக்கை மீட்டு விசாரித்தனர். அந்த மோட்டார் சைக்கிளையும் அதன் ஆவணங்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தபோது, அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தன.

தன் தந்தை செய்த செயலை மழலையாகப் போட்டுக்கொடுத்த இந்தச் சுட்டித்தனமான சிறுவனின் செயலால் அங்கிருந்த காவலர்களும் பொதுமக்களும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர். ஆவணங்கள் சரியாக இருந்ததால் சிறுவனைப் பாராட்டிவிட்டு போலீசார் எச்சரித்துச் சென்றனர். தற்போது இந்தச் சுவாரசியமான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.