டெல்லியில் தங்களது கட்சி சார்பில் தீவிரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள ‘பர்கர் கிங்’ உணவகத்தில் சொகுசாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’யின் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியா, அதிரடியாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதைத் தொடர்ந்து கட்சித் தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது குறித்து காக்ரோச் ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நமது தொண்டர்களும் குழுவினரும் போலீசாரின் கொடூரமான தடியடியை எதிர்கொண்ட வேளையில், நமது செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியாவின் இந்த பொறுப்பற்ற செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தகைய நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, விஜேதா தஹியாவை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்குவதுடன், அவரது அனைத்து அதிகாரப்பூர்வ பொறுப்புகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijeta Dahiya (@vijetadahiya1)

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியின் போது, தொண்டர்கள் தெருவில் போலீஸ் தடியடியை எதிர்கொண்ட வேளையில், தஹியா பர்கர் கிங் கடையில் இருக்கும் வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், அங்கிருந்த சிலர் தஹியாவை நோக்கி, “தொண்டர்கள் அடி வாங்கும்போது நீங்கள் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இங்கே இருக்கிறீர்கள்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். இந்த விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பதிலளித்த தஹியா, “பசி எடுத்தால் பர்கர் சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த லட்சியத்திற்காக நான் அயராது உழைத்து வருகிறேன். இரண்டு நாட்களாக தூங்கவே இல்லை. வீட்டில் அமர்ந்து கொண்டு பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்” என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது வண்ணமயமான ஆடை மற்றும் போராட்டத்தில் ஆடியது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “நான் வண்ணச் சட்டை அணிவதையும், போராட்டத்தில் நடனமாடுவதையும் தான் மக்கள் பெரிதுபடுத்துகிறார்கள், ஆனால் உண்மையான சமூகப் பிரச்சினைகளைக் கவனிப்பதில்லை. இந்த போராட்டத்தில் பங்கேற்க எனக்கு யாரும் பணம் தருவதில்லை. நான் செய்வதெல்லாம் நாட்டிற்காகத்தான். ஆமாம், நான் பர்கர் தான் சாப்பிடுவேன், அதில் எந்தத் தவறும் இல்லை” என்று கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்மீகவாதி பிரேமானந்த் மகராஜை ‘பிராமணியத்தின் கருவி’ என்று விமர்சித்து, அவரை ‘மகராஜ்’ என்று அழைக்க முடியாது, ‘பிரேம் பாய்’ என்றுதான் அழைப்பேன் எனக் கூறி தஹியா பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.