கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் கடந்த 1- ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு காரில் வந்துள்ளனர். இந்நிலையில் பூண்டி பகுதிக்கு சென்ற வாலிபர்கள் தங்குவதற்கு அறை இல்லாததால் காரியிலேயே தங்கியுள்ளனர். அடுத்த நாளில் கரடு முரடான மலைப்பாதை வழியாக வாலிபர்கள் காரில் சென்று மூன்று கிலோமீட்டர் தொலைவில் விவசாயிகள் அமைத்திருந்த குடிசையில் தங்கியினர். இந்நிலையில் வனப்பகுதியில் இயற்கையாக போதை காளான்கள் முளைத்திருக்கும் என்ற தகவல் கிடைத்தது.

இதனால் வாலிபர்கள் போதை காளானை பறிப்பதற்காக அடர்ந்த வனப் பகுதிக்குள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தனர். மேலும் தனித்தனியாக சென்று போதை காளான்களை தேடியதில் 2 வாலிபர்கள் வழித்தவரி அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். திரும்பி சொல்ல அவர்களுக்கு வழி தெரியவில்லை. செல்போன் மூலமும் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. இது தொடர்பாக மற்ற 3 வாலிபர்களும் கோட்டையம், கொடைக்கானல் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து இரு மாநில போலீசாரும், வனத்துறையினரும் தீவிரமாக தேடி உள்ளனர். அப்போது 10 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் வழி தெரியாமல் மூன்று நாட்களாக சிக்கித் தவித்த 2 பேரையும் விறகு சேகரிக்க சென்ற மலை கிராம மக்கள் பார்த்து தாங்கள் கொண்டு சென்ற உணவு தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர். பின்னர் 2 பேரும் கொடைக்கானல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் போதை காளான் பறிக்க சென்றதை அறிந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.