தேவகோட்டை அருகே மது போதையில் பேருந்து ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்ற காரின் பின்புறம் பேருந்து மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த நகுல், அவரது தந்தை வெங்கடேசன், தாய் கவிதா ஆகிய மூன்று பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இது குறித்த தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அரசு பேருந்து ஓட்டுனர் தனபால் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மது போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய தனபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.