தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் பொங்கல் பரிசு பணத்தை வாங்க விரும்பாத ரேஷன் அட்டைதாரர்கள் அரசுக்கு விட்டுக் கொடுப்பது எப்படி என்று பார்க்கலாம். www.tnpds.gov.in என்ற தளத்தில், உரிமம் விட்டுக் கொடுத்தல் பகுதியில், வாங்க விரும்பாத பொருட்களை பதிவிட்டு, சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அரசுக்கு விட்டுக் கொடுத்ததாக கருதி, கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படாது. இந்த வசதியின் மூலம் ஊழியர்களின் முறைகேடுகளை தவிர்க்கலாம். அரசு நிதி நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே மின்சாரத் துறையில் 100 யூனிட் மின்சாரம் தங்களுக்கு வேண்டாம் என்று கூறுபவர்கள் எழுதிக் கொடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது .அதேபோன்று அரசு நிதிநிலை சார்ந்த நடவடிக்கையாக இதுவும் பார்க்கப்படுகிறது.