காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த ராமயா புகலா (21) என்பவர் படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். இதனால் அவர் தன்னுடன் தங்கி இருந்த சக மாணவர்களிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி விளையாடியுள்ளார். இந்நிலையில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மிகவும் மன வேதனையில் ராமயா இருந்துள்ளார்.

இதனால் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு இளைஞர் உயிர் பறிபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.