தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக வி. சிவா நியமிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக இருந்த பூச்சி முருகன் கடந்த மே 5-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது காலியாக இருந்த அந்த முக்கியப் பதவிக்கு வி. சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் வி. சிவா, வீட்டுவசதி வாரியத் தலைவராகத் தன்னை நியமித்து வெளியிட்ட அரசாணையுடன் முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான பின்னணியும் உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போது பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளராக இருந்த சிவா, முதல்வருக்காகத் தனது தொகுதியை எவ்விதத் தயக்கமும் இன்றி விட்டுக் கொடுத்தார். இந்தத் தியாகத்தை தே முதல்வர் விஜய் நெகிழ்ச்சியுடன் மேடையில் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வருக்காகத் தொகுதியை விட்டுக் கொடுத்து, தேர்தல் வெற்றிக்காக அயராது உழைத்த வி. சிவாவுக்கு, தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் என்ற மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தியாகத்திற்கும் உழைப்பிற்கும் கிடைத்த உரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படும் இந்த நியமனம், தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.