கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளியில் மெஹபூப் அலி என்பவர் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். ஆனால் இதனை பெண் ஆசிரியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் அந்த உதவி ஆசிரியர் தொடர்ந்து பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் ஆசிரியை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று மெஹபூப் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவரது ஆடைகளை கிழித்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதோடு பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் அவர் தனக்கொரு குடும்பம் இருப்பதாகவும், தன்னை மன்னிக்குமாறு அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் எழுத்துப்பூர்வமாகவும் மன்னிப்பு கடிதம் வாங்கிக் கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.