திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வரகனேரி சூளக்கரை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண்ணை சிறிது தூரம் தள்ளி பேருந்து இறக்கி விட்டது. இதனால் அந்த பெண் பயணிக்கும் நடத்துனர் மூக்கையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பேருந்து துவாக்குடி சென்று விட்டு மீண்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அந்தப் பெண் இறங்கிய நிறுத்தத்தில் இருந்து ஐந்து இளைஞர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர். அவர்கள் பேருந்து நடத்துனாரிடம் எப்படி பெண் பயணியை திட்டலாம் என்று கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வைரல் ஆகி வரும் நிலையில் மூக்கையன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு இளைஞர்களை தேடி வருகின்றனர்.