மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இகத்புரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பவாலி நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சில உள்ளூர் இளைஞர்கள், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டு, அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அந்த இளைஞர்களின் அநாகரீகமான செயலைத் தட்டிக்கேட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரவுடி கும்பல், அந்த குடும்பத்தினரை வன்முறையோடு தாக்கத் தொடங்கியது.

“>

மேலும் தங்களுடைய உயிருக்கு பயந்து அந்த குடும்பத்தினர் உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் இரும்பு கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளுடன் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்தக் காரைத் துரத்திச் சென்றுள்ளது. வழியில் பலமுறை காரை வழிமறித்து, காரின் கண்ணாடிகளை இரும்பு கம்பிகளால் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த படுபயங்கரமான தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.