ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டைல்ஸ் ஷோரூமுக்குள் பயங்கரமாக மோதிய விபத்தில், 37 வயது நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். காவல்துறை இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

நூஹ் சாலையில் உள்ள ருந்து நிலையம் அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது. முன்னதாக அந்த கார் ஒரு பிக்கப் லாரி, மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு கார் மீது மோதிய பின்னரே கட்டுப்பாட்டை இழந்து ஷோரூமுக்குள் நுழைந்துள்ளது. ஷோரூமில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

உயிரிழந்தவர் தினக்கூலி தொழிலாளி கபில் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் தனது வீட்டிற்காக டைல்ஸ் வாங்குவதற்காக அவர் தனது மைத்துனர் பிரதீப்புடன் அந்த ஷோரூமுக்கு வந்துள்ளார். தினக்கூலித் தொழிலாளியான கபிலுக்கு மனைவியும் மூன்று இளம் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கபில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குக் காரணமான கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய ஓட்டுநரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் காவல் நிலைய அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்தார்.