பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் அஞ்சலிதேவி தம்பதியினர் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக மகேஷ் குமார், அஞ்சலி தேவியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்ட பெண் குழந்தையை விலை கொடுத்து வாங்கியது திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது.

அவரையும் போலீசார் கைது செய்த விசாரித்த நிலையில் அஞ்சலி தேவியின் தாயார் பூனம் தேவி, அவருடைய தங்கை மெகா குமாரி ஆகியோர் இந்த சம்பவத்தில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் பீகாரில் வறுமையில் தவிக்கும் குடும்பத்திடமிருந்து அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதாக வாங்கி வந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி இறுதியாக இரண்டு லட்சத்திற்கு விஜயன் என்பவரிடம் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.