கேரள மாநிலம் இடுக்கியில் பிரபலமான சுற்றுலா தளமாக மூணார் இருக்கிறது. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் அவர்களுக்கு யானை சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு யானையை பாலகிருஷ்ணன் (57) என்பவர் பராமரித்து வந்துள்ளார். இவர் சுற்றுலா பயணிகள் கூடியிருந்த நேரத்தில் யானையிடம் கட்டளையை பின்பற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் யானை அதைக் கேட்காததால் கோபத்தில் அதை பிரம்பால் அடித்தார்.

தொடர்ந்து அவர் பிரம்பால் அடித்ததால் யானை ஆக்ரோஷம் அடைந்தது. கோபத்தில் பாலகிருஷ்ணனை காலால் மிதித்தே யானை கொன்றது. இதனை தடுக்க சென்ற மற்றொரு பாகனையும் யானை தாக்க முயன்றது. இதனால் அவர் அங்கிருந்து விலகினார். யானை சரமாரியாக மிதித்ததில் பாலகிருஷ்ணன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் யானையை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு பாலகிருஷ்ணனின் உடலை மீட்டனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.