டெல்லியில் பாஜக அரசினால் நாடாளுமன்றம் ஒன்று கட்டப்பட்டது. இது சுமார் 1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு மேற்கூரையில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி-கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் கேலியாக பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “நாடாளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே நீர் கசிவு” என்றார். புதிய கட்டிடம் கட்டி ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் நீர் கசிவு என்று தெரிவித்தார். இதைப்போன்று மனிஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் பழைய கட்டிடம் இதை விட சிறப்பாக இருக்கும். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் சொட்டு நீர் பாசன திட்டம் முடியும் வரை நாம் ஏன் பழைய கட்டிடத்திற்கு செல்லக்கூடாது என்றார். பாஜக ஆட்சியில் கட்டப்படும் ஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் கசிவு என்பது அவர்கள் வடிவமைப்பின் பகுதியா என்று மக்கள் கேட்கிறார்கள். மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாடாளுமன்றம் 120 மதிப்புள்ள பக்கெட்டை நம்பி உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியும் கேலி செய்துள்ளது.