பழனியில் கும்பாபிஷேக விழாவை தரிசிப்பதற்கு ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பக்தர்கள் www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம் ஆகிய ஏதாவது ஒரு ஆவண எண்ணை  சமர்ப்பித்து அதோடு தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ஜனவரி 18ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் முதலில் முன்பதிவு செய்யும் 2000 பக்தர்களுக்கு மட்டுமே கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் முன்பதிவு செய்யாதவர்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி ஈமெயில் மற்றும் எஸ் எம் எஸ் மூலம் முன்பதிவு உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.