சென்னை புழுதிவாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேகா என்ற மனைவி உள்ளார். இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இந்த தம்பதியினருக்கு 12 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இவர்களது இளைய மகன் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பரதன் கண்டித்தார்.
அப்போது சுரேகா என் குழந்தையை திட்டுகிறீர்கள் என கேட்டதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பரதன் தனது மனைவியின் இடது பக்க தலையை பிடித்து கண்மூடித்தனமாக சுவற்றில் அடித்துள்ளார். இதனால் சுரேகா மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் தனியார் மருத்துவமனையில் 23 நாட்களாக சுரேகா கோமாவில் இருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பரதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.