அமைதியான சூழலில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு என்ன என்ற பெரிய கேள்வியை எழுப்பும் வகையில் ஒரு கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் புதன்கிழமை அன்று நடைபெற்ற கே.எஸ்.யு.  அமைப்பின் கருப்புக் கொடி மோட்டார் சைக்கிள் பேரணியின் போது, வன்முறை வெடித்தது. அந்தப் பேரணியின் நடுவே சிக்கிக்கொண்ட ஒரு குடும்பத்தின் வாகனம் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளது.

வன்முறைக் கும்பல் சூழ்ந்தபோது பயந்துபோன அந்தத் குடும்பத்தினர் பயணித்த காரின் ஜன்னல் கண்ணாடிகள் கற்களாலும் தடிகளாலும் அடித்து நொறுக்கப்பட்டன. அப்படியும் நிலைமையைச் சமாளித்த ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அந்த இடத்திலிருந்து வேகமாக இயக்கிச் சென்று குடும்பத்தினரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், அதற்குள் காரின் அனைத்துக் கண்ணாடிகளும் சுக்குநூறாகச் சிதறிவிட்டன. காரின் உள்ளே இருந்த பச்சிளம் குழந்தையும், பெரியவர்களும் அச்சத்தில் நடுங்கினர். இதுகுறித்து வாகனத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

“திடீரென்று ஷில்லாங்கில் ஏதோவொரு அமைப்பினர் எந்தவொரு காரணமும் விவாதமும் இல்லாமல் எங்கள் காரை அடித்து நொறுக்கினர். உள்ளே என் குழந்தை இருந்தது. என் குழந்தையின் முகத்தைப் பாருங்கள், காரின் கண்ணாடியை எப்படி உடைத்துள்ளனர் பாருங்கள்” என்று அவர் அந்த வீடியோவில் கதறி அழுதுள்ளார்.

 

போலீஸ் வட்டாரங்களின் தகவல்படி, இந்த வன்முறைச் சம்பவம் போலோ, பாரிக் மற்றும் மவ்லாய் போன்ற பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வெடித்துள்ளது. போலீஸ் பாதுகாப்பு வாகனமே வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டதுடன், தேசிய தகவல் மையத்தின் (NIC) வாகனத்தின் பின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு பிக்கப் டிரக் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்குச் சொந்தமான வாகனமும் குறிவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

குறிப்பாக,  அரசு வாகனம் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோக்களில், போராட்டக்காரர்கள் இரும்புத் தடிகளால் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுமட்டுமின்றி, ஆர்.ஆர். காலனி பகுதியில் சுவாமி விவேகானந்தர் சிலை மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைகளைச் சுற்றியிருந்த கண்ணாடிப் பெட்டுகளும் வன்முறையாளர்களால் அடித்துத் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்புப் பங்கீடு, பழங்குடி மக்களின் பாதுகாப்பு, புலம்பெயர்தல் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை கே.எஸ்.யு. அமைப்பு நடத்தியிருந்தது. மாநில அரசு இந்தக் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அந்த அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், தற்போது நடந்த இந்த வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.