பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பழனி கோவில் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்த புகாரில் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயபிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தங்கள் மீதான கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி இருவரின் தரப்பிலும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றபோது, நில மோசடியின் தீவிரத்தன்மையையும், விசாரணை நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி அரசுத் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரூ.100 கோடி கோவில் நில மோசடி விவகாரத்தில் குற்றச்சாட்டுகளின் தன்மை தீவிரமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு கோவில் நில மோசடி வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
