சென்னை மகிந்திரா வேர்ல்டு சிட்டியில் வசித்து வரும் 55 வயதான நபர் ஒருவர் சோளத்தை படுத்துக்கொண்டே சாப்பிட்டதால் அது அவரது மூச்சுக் குழாய் வழியே சென்று நுரையீரலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு திடீரென்று இருமலும் மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர்கள் ரேலா மருத்துவமனைக்கு செல்லுமாறு அந்நபரை அறிவுறுத்தினர்.
அதன்படி அவர் உடனே ரேலா மருத்துவமனைக்கு வந்தார். அதனை தொடர்ந்து அந்நபருக்கு ஸ்கேன் மற்றும் ப்ரோன்கோஸ்கோபி பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருடைய வலது நுரையீரலின் அடிப் பகுதியில் சோளத்துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் நுரையீரல் நுண்துளையீட்டு ஆலோசகர் டாக்டர் பென்ஹூர் ஜோயல் ஷட்ராக் தலைமையிலான நிபுணர்கள் குழு, அந்த சோளத்துண்டுகளை ப்ரோன்கோஸ்கோபிக் வாயிலாக ஜீரோ டிப் மீட்பு கூடையை கொண்டு அகற்ற முடிவு செய்தது.
அதன்படி நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, ப்ரோன்கோஸ்கோப் நுரையீரலுக்கு வாய் வழியே செலுத்தப்பட்டு மீட்பு கூடை மூலம் 2 சோளத்துண்டுகள் வெளியே எடுக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் நுரையீரல் செயல்பாடு சீரானதோடு, எவ்விதமான சிக்கலும் இன்றி அதே நாளில் அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.