பொதுவெளியில் சைக்கிள் ஓட்டும்போது இறுக்கமான விளையாட்டு ஆடை அணிந்திருந்தார் என்ற விசித்திரமான காரணத்திற்காக, துருக்கி நாட்டின் முக்கிய மாகாணத்தின் கவர்னர் ஒருவர் அவரது பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் அர்தஹான் மாகாண கவர்னராகப் பதவி வகித்து வந்த மெஹ்மத் ஃபாத்தி சிசெக்லி என்பவருக்கு எதிராகத்தான் இந்த விசித்திர நடவடிக்கை பாய்ந்துள்ளது.
விளையாட்டு மற்றும் சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட கவர்னர் மெஹ்மத் ஃபாத்தி, சமீபத்தில் சாதாரண விளையாட்டு ஆடைகளை அணிந்து நகருக்குள் சைக்கிள் ஓட்டியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, துருக்கி அதிபர் தையிப் எர்டோகனின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். “முன்னால் பாதுகாப்புப் படையினர் செல்ல, ஒரு மாகாணத்தின் கவர்னர் இது போன்ற இறுக்கமான ஆடைகளை அணிந்து பொதுவெளியில் சைக்கிள் ஓட்டுவது நாட்டின் கண்ணியத்திற்கும், அந்த மாகாணத்தின் கலாச்சார விழுமியங்களுக்கும் எதிரானது” என்று நாடாளுமன்றத்தில் விவாதம் கிளம்பியது. இதனைத் தொடர்ந்தே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்ட கவர்னர் மெஹ்மத் ஃபாத்தி சிசெக்லிக்கு ஆதரவாக துருக்கி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் திரண்டுள்ளனர். “நான் ஒரு தடகள வீரர். சைக்கிள் ஓட்டுவதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆடைகளைத்தான் நான் அணிந்திருந்தேனே தவிர, எந்தவொரு அநாகரிகமான ஆடையையும் அணியவில்லை. எனது சைக்கிள் பயணத்தை நான் எப்போதும் நிறுத்தப் போவதில்லை” என்று கவர்னர் மிகத் தெளிவாகத் தனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
கவர்னர் மெஹ்மத் ஃபாத்தி சிசெக்லி, அர்தஹான் மாகாணத்தில் விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் மற்றும் சைக்கிள் சுற்றுலாவை மேம்படுத்தப் பல நற்பணிகளைச் செய்துள்ளார் என்று கூறி, அவரை மீண்டும் அதே பதவியில் அமர்த்தக் கோரி இணையதளத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் பிரச்சாரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாகக் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை அவர் அந்த மாகாணத்தை விட்டு விடைபெற்றுச் சென்றபோது, திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கியுள்ளார். “என்னை எப்போதும் நம்பிய மக்களின் நம்பிக்கையை நான் ஒருபோதும் உடைக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று அவர் உருக்கமாகக் கூறி விடைபெற்றது அங்கிருந்தோரை கலங்க செய்துள்ளது.
